மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் – நிர்மலா தேவி ஜாமினில் விடுதலை

கைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமின் பெற்றனர். ஆனால், நிர்மலா தேவியின் ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர், உரிய விசாரணை நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர், ஜாமின் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு நிர்மலா தேவி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை அவரை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு எவ்வித பேட்டியும் அளிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் நிர்மலா தேவி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !