மாணவர்கள் தேர்வின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதற்கான மனநல ஆலோசனைகள்

 இன்றைய நவீனகால கட்டம் போட்டி நிறைந்த ஒன்றாகும். மிக நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் விருப்பப்பட்ட பிரிவுகளுக்கு போக முடியும். மருத்துவம், பொறியியல், இளநிலை கம்ப்யூட்டர் போன்ற பிரிவுகளில் சேர நிறைய மதிப்பெண்கள் தேவைப்படும். மாணவர்களின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

நிறைய மாணவர்கள் தாங்கள் அல்லது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்த அளவு மார்க் வரவில்லையென்றால் மனச்சோர்வு அடைவார்கள். சில மாணவர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு துணிந்தும் விடுவார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பின்படி நம்மால் மதிப்பெண் வாங்க முடியவில்லையே, பின் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தோடு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து கொள்ள, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

ஆராய்ச்சியின்படி, தேர்வில் தோல்வியுற்றவர்களில் 10 சத வீத மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள், ஒரு சிலர் அதிலும் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். உலகத்திலே உருவாக்க முடியாதது என்று ஒன்று உண்டென்றால் அது உயிர் மட்டும் தான். உயிர் போய்விட்டது என்றால் திரும்ப வாங்க முடியாது.

எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பரிட்சை ரிசல்ட் வந்தவுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிக்க வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கடின வார்த்தைகளைக் கூறி மேலும் அவர்களை மனசோர்வுக்கு ஆளாக்கக்கூடாது.

பரிட்சையில் தோல்வியடைந்தால் மாணவர்களுக்கு எற்படும் மனரீதியான உணர்வுகள்.

1. கோபம், 2. பயம், 3. பதட் டம், 4. கலகலப்பு இல்லாமை, 5. தனிமையில் ஒதுங்கி இருப்பது, 6. குற்ற மனப்பான்மை, 7. தாழ்வு மனப்பான்மை, 8. தூக்கமின்மை, 9. பசியின்மை, 10. உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பரிட்சையில் தோல்வியடைந்தால் பெற்றோர்கள் செய்ய வேண்டிவை :

1. பரிட்சையில் தோல்வியைடந்து விட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைக்கக்கூடாது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தை உண்டு பண்ண வேண்டும்.

2. தோல்வியடைந்த மாணவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எதிர்மறையாகப் பேசுவதையும், தற்கொலை பற்றி பேச்சு வந்தால் அதற்கு உண்டான தடுக்கும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஆறுதலான வார்த்தைகளைப் பேச வேண்டும். வீட்டில் கத்தி, கயிறு மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

3. தோல்வியடைந்த மாணவர்கள் தனிமையில் வீட்டைப் பூட்டிக் கொண்டு இருப்பதை தவிர்க்க சொல்ல வேண்டும். தோல்வி தான் வெற்றிக்கான அறிகுறி போன்ற உற்சாகம் தரும் வார்த்தைகளைப் பேச வேண்டும்.

4. மேலும் மனநல மருத்துவரிடம் போய் காண்பித்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு மனநல ஆலோசனைப் பெறலாம்.

இது போன்ற விசயங்களை பெற்றோர்களும், மாணவர்களும் கடைபிடித்து வாழ்க்கையில் ஏற்படுகிற சில பின்னடைவுகளை எதிர்த்து “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !