மாகாணசபை அமைச்சை மைத்திரி பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த அணி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபை அமைச்சைப் பொறுப்பேற்று, உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, மஹிந்த அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர், ரமேஸ் பத்திரன இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாணசபைத் தேர்தலை பிற்போடும், அரசாங்கம், அந்தத் தேர்தலை நடத்தாது, ஜனாதிபதித் தேர்தலை நடத்தவே முயற்சிக்கிறது.

நாட்டில், எந்தவொரு மாகாணத்திலும் வெற்றிபெற முடியாது என்பதாலேயே, அவர்கள் மாகாணசபைத் தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தற்போது உறுதியாக இருக்கிறார்.

பழைய முறையில் இதனை நடத்த வேண்டுமெனில், அந்த சட்டத்தில் சிறியதொரு திருத்தத்தை மட்டும்தான் செய்ய வேண்டும். எனினும், மாகாணசபைகளுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் அதனை நிறைவேற்றுவாரா? என்பது சந்தேகமே.

எனவே, மாகாணசபை அமைச்சை ஜனாதிபதி தற்காலிகமாக பொறுப்பேற்று, குறித்த சட்டத்திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும்.

அது அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்பட வேண்டும். அப்போது இதற்கு எவரேனும் எதிர்ப்பினை வெளியிடுவார்களாயின், யார் மாகாணசபைத் தேர்தலை பிற்போட உதவியவர்கள் என்பதை மக்களால் தெளிவாகக் கண்டுக்கொள்ள முடியும்.

எனவே, ஜனாதிபதி இந்த செயற்பாட்டை மேற்கொண்டு, மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியை குறிப்பிட வேண்டும்.” என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !