மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுக்க வேண்டும்: பவ்ரல் அமைப்பு

நாட்டினது பிரதமர் என்ற ரீதியில் மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவேண்டும் என பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி இன்று (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையினை ஜனாதிபதியிடம் விரைவாக சமர்ப்பித்து, பிரதமர் என்ற ரீதியில் மாகாணசபை தேர்தலை விரைவுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கம் என்ற அடிப்படையில் மக்களின் தேர்தல் உரிமைகளுக்கு நாட்டினது தலைவர் என்ற வகையில் வாய்ப்பளிக்க வேண்டும்.

தற்போது நாட்டில் முன்னெடுத்துச் செல்லப்படும் ஆட்சியில் நாட்டினது பொறுப்புவாய்ந்த தலைவர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக் கூறவேண்டியதுடன், மக்களது தேர்தல் உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்” என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !