மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு புவனேக அளுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக எழுத்துமூல கோரிக்கையை விடுப்பதற்கு காலம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இது சம்பந்தமாக தமது சேவையாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்னும் பூர்த்தியாகவில்லை என்பதால் அதற்கு காலம் வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக இருந்தால், உச்ச நீதிமன்றில் உள்ள இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதற்கு தமது சேவையாளர்கள் தயார் என்று நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி குறித்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !