Main Menu

மஹிந்த மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்- தவராசா

மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில்- மண்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தவராசா கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது, “எமது பலமான போராட்டத்தை அழித்த கருணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முடியாது.

வடக்கு- கிழக்கிலுள்ள  தமிழ் மக்கள் எம்மை ஏக பிரதிநிதிகளாக ஏற்று இருக்கிறார்கள். எமது கல்வியாளர்களை அழித்து எமது பொருளாதாரத்தை சிதைத்து அரசுக்கு துதிபாடும் கருணாவால் எமது மக்களுக்கு எப்போதும் நன்மை இல்லை.

மேலும் கருணாவின் ஒவ்வொரு பேச்சுகளையும் பார்த்தால் அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி போய் பைத்தியம் பிடித்தவர் போல புலம்பி திரிகின்றார்.

தமிழீழ விடுதலை புலிகளை வைத்து அரசியல் செய்ய கருணாவிற்கு உரித்து இல்லை .குறிப்பாக கருணா தமிழர்களுக்கு உரிய பண்புகளை இழந்து நிற்கின்றார். ஒட்டு மொத்த தமிழர்களையும் தலைகுனிய வைத்து விட்டு தேர்தலில் களமிறங்கி இருக்கின்றார்.

மாற்று சமூகத்திற்கு எமது  நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பறித்து தாரைவார்க்கும் செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றார். எமது போராட்டத்தை காட்டி கொடுத்ததற்காக அரசாங்கம் கருணாவிற்கு அரை மந்திரி பதவியை இரண்டு தடவை வழங்கியது .

அக்காலத்தில் கருணாவுடன் இணைந்து போராடிய போராளிகளையாவது காப்பாற்றி இருக்கலாமே இவற்றை செய்யாத ஒருவரால் அம்பாறை மாவட்டத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும்” என  அவர் கேள்வி  எழுப்பியுள்ளார்.

பகிரவும்...