மழையால் டையில் முடிந்தது கடைசி போட்டி: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 160 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. 9 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்தது. மழை விட்டதும் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணிக்கு தேவையான ரன்கள் இருந்ததால், போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, 3 போட்டி கொண்ட டி2௦ தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.