மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம்!

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக எதிர்வரும் 24ஆம் திகதி காலை 09.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகரிகம் வளர்ந்து விட்ட இந்த உலகிலே வெறும் தொழிலாளர்களாக, முதலாளிகளுக்கு வெறும் இலாபத்தை ஈட்டி கொடுக்கிறவர்களாக இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாக எமது உறவுகளான மலையக தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்களால் நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கிளிநொச்சியில் நடைபெறும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாணத்திலும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்கள், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !