“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)

வன்முறைகளுக்கு சமாதி கட்ட
வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளியிட
மாக்களை மண்ணிலிருந்து விரட்ட
மலரட்டும் எங்கும் மனிதநேயம்
மகிழட்டும் மனித உள்ளங்கள்
நெகிழட்டும் உங்கள் நெஞ்சமும் !
இருகரம் கூப்பி வணங்குவதை விட
ஒரு கரம் நீட்டி உதவுவது
உன்னதமானது என்ற
உயரிய நோக்கத்தை
உலகிற்கு உணர்த்த
உருவானதே ஆவணித் திங்கள் 19இல்
உலக மனிதநேய தினம் !
மக்கள் எல்லாம் மாக்களாகி
பாதை தவறி படுகுழிக்குள் விழுந்து
போதைக்கு அடிமையாகி
வாழ்வினைத் தொலைத்து
புலம்புகின்றார் புத்தி தடுமாறி
மனிதநேயத்தை எங்கே தேடுவது?
கொடிய கொரோனா வந்தும்
உயிர்களும் இலட்ச இலட்சமாய் மடிந்தும்
உணர்வோடு சேரவில்லை இன்னும் மனிதநேயம்
உறவுகளுக்கு உள்ளேயே போட்டியும் பூசல்களும்
இதில் எங்கே தேடுவது மனிதநேயத்தை !
மனிதநேயம் மடிந்தே விட்டது !
வீதியில் விழுந்தோரை
வேதனையில் துடிப்போரை
ஆபத்தில் இருப்போரை
அவலக் குரல் கொடுப்போரை
கரம் கொடுத்துக் காத்திடுவீர்
காருண்ணியம் பேணிடுவீர்
மலரட்டும் எங்கும் மனிதநேயம்
மகிழட்டும் மனித உள்ளங்கள் !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 19.08.2020