மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே

அமெரிக்க வெளியுறவுக்கொள்கை உள்ளிட்ட பல முக்கிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சி செய்தது. இதனையடுத்து ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு எதிரான பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக லண்டன் சென்று அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் 2012ம் ஆண்டு அரசியல் தஞ்சம் புகுந்தார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களில், அசாஞ்சே தன் கோபத்தை சமூக வலைத்தளம் மூலமாக வெளியிட்டுள்ளார். தன் மீது அவதூறு சுமத்தி 7 ஆண்டுகளாக தடுத்து வைத்திருந்த ஸ்வீடன் அதிகாரிகளின் செயலை மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று டுவிட் செய்துள்ளார். முன்னதாக தூதரகத்தில் புன்சிரிப்புடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

பாலியல் வழக்கு விசாரணையை ஸ்வீடன் கைவிடும் முடிவை ஈக்வடார் வரவேற்றுள்ளது. அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே, பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைய விரும்புகிறார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !