மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பா.ம.க. தீர்மானம்

வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 21 பேரின் நினைவாக ஆண்டுதோறும் இடஒதுக் கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர் கடைபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை பா.ம.க. சார்பில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது.

மாநாட்டின் தொடக்கமாக, இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் நினைவு தூண்களுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி 21 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க தலைவர் குரு முன்னிலை வகித்தார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., எழுச்சியுரை ஆற்றினார். அவரை தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேருரையாற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

* மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

* கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.

* மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு சிறப்பு திட்டம் கொண்டு வரவேண்டும்.

* மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

* மத்திய அரசு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்.

* பெரு நிறுவனங்கள், நீதித்துறையில் இடஒதுக்கீடு தேவை.

* பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட தகுதி தேவை.

* செப்டம்பர் 17-ந் தேதியை தியாகிகள் தினமாக அறிவிக்க வேண்டும்.

* இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

* தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இரங்கல் தீர்மானமாக இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !