மருத்துவரின் வெள்ளை மேலாடையில் எவ்வளவு கிருமிகள்- ஆய்வு அறிக்கை
மருத்துவருக்கு இருக்கும் தனி அடையாளம் அவரது வெள்ளை மேலாடை.
மருத்துவரின் உன்னதமான பணியை வெளிப்படுத்தும் குறியீடாக அதனைப் பார்ப்போரும் உண்டு.
மருத்துவர் வெள்ளை மேலாடை அணிவதுதான் சிறப்பு என்று பலரும் கூறுகின்றனர்.
ஆனால் அந்த வெள்ளை மேலாடையில் ஏராளமான பாக்டீரியாக்களும், நுண்ணுயிர்க் கிருமிகளும் இருப்பதாக The New York Times வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.
பல்வேறு ஆய்வுகளை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்தகைய வெள்ளை மேலாடைகள் பார்ப்பதற்குச் சுத்தமாக வெள்ளையாக இருந்தாலும், அவற்றில் மருத்துவமனைகளில் தொற்றும் மருந்துக்குக் கட்டுப்படாத கிருமிகள் பல இருக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
அமெரிக்க மருத்துவர்களில் பலர் ஒரு வாரம் வரை தங்கள் வெள்ளை மேலாடையைத் துவைப்பதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்தது. அதில் 17 விழுக்காட்டினர் ஒரு மாதம்வரை துவைப்பதில்லை என்றனர்.
மேலாடைகள் மட்டுமின்றி மருத்துவர்கள் சோதிக்கப் பயன்படுத்தும் கருவிகள், கைத்தொலைபேசிகள், மாத்திரைகள் ஆகியவற்றிலும் கிருமிகள் இருக்கலாம் என்கிறது ஆய்வு.
எளிதாகக் கிருமிகள் தொற்றாத உடைகளை மருத்துவர்களும் தாதியரும் அணிவது ஒரு தீர்வாக இருக்கலாம்; ஆனால் சில வகை பாக்டீரியாத் தொற்றை அவற்றால் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.