மரண தண்டனை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க

சட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு – காக்கை தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் தொிவித்த அவர், “மரண தண்டனை விவகாரம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. குற்றவாளிகள் தொடர்பான சரியான தகவல்கள் கண்டறியப்பட வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அது சாத்தியமாயின் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றவாளி ஒருவருக்கு பொலிஸார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது அதனை மனித உரிமை மீறல் என ஒருசிலர் அடையாளம் காண்கின்றனர். ஆனால் தேசிய அரசாங்கத்தில் மனித உரிமைகளுக்கும் முதலிடமுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்றால் நாட்டில் எல்லையற்ற சுதந்திரம் உள்ளதா? என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகள் பெற்று கொடுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய இரண்டுக்கும் சம உரிமை வழங்கி மக்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுப்பதும் அவசியமாக காணப்படுகின்றது. எனவே இதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !