மரண தண்டனையை நிறைவேற்ற தயார்: ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கண்டியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பௌத்த சமூகம் என்ற வகையில் மரணதண்டனை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றபோதும் உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் உபதேசங்களை நிகழ்த்தியும் உபதேசங்களை செவிமடுத்தும் வருகின்ற ஒரு சமூகம் இந்தளவுக்கு பிழையான வழிகளில் செல்லுமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

பாடசாலை பிள்ளைகளை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக கல்வி அமைச்சும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதிலும் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார்.

2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலைகள் தொடர்பாக நேற்றைய தினம் தேசிய பாதுகாப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக சில ஊடகங்கள் முன்வைக்கும் தவறான ஊடக அறிக்கைகளை சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி கொள்வதாக தெரிவித்தார்.

எவ்வாறானபோதும் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் பெற்றோரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !