மம்தா சூர்ப்பனகை, காங்கிரஸ் ராவணன் – பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்றும், காங்கிரஸ் கட்சியை ராவணன் என்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. சித்தரித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பலியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரசிங். இவர் தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்துக்கு சென்று விட்டனர். அந்த மாநிலத்தில் அவர்களுக்கு உரிய சுதந்திரம் கிடைப்பது தான் இதற்கு காரணம்.

மேற்கு வங்காளம் விரைவில் மற்றொரு ஜம்மு காஷ்மீராக மாறிவிடும். அங்கு மம்தா பானர்ஜி சூர்ப்பனகையாக உள்ளார். காங்கிரஸ் கட்சி ராவணன் போல திகழ்கிறது.

வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்தில் ஊடுருவும் பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து தாக்குகின்றனர். அங்கு இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை மம்தா பானர்ஜி வேடிக்கை பார்த்து வருகிறார். நல்ல வேளையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார்.

அடுத்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும். அப்போது அங்குள்ள பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள். மேற்கு வங்கத்தின் சூர்ப்பனகையை மோடியும், அமித் ஷாவும் வெல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மம்தா பானர்ஜியை சூர்ப்பனகையாகவும், காங்கிரஸ் கட்சியை ராவணனாகவும் சித்தரித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜனதா கட்சியினர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கூறினார். அதை கண்டு கொள்ளாமல் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !