மன்னிப்புக் கோரினார் தாய்லாந்து இளவரசி

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக அந்நாட்டு இளவரசி உபோல்ரத்தனா மன்னிப்புக் கோரியுள்ளார்.

தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்பியதாக இளவரசி உபோல்ரத்தனா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அது பிரச்சினையை உருவாக்கும் என தான் நினைக்கவில்லை எனவும் அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட அனுமதிக்க வேண்டாமென மன்னர் வஜிரலங்கோர்ன் தடை விதித்திருந்தார்.

தாய்லாந்தில் 1932 ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர், அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், இராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.

அந்த வகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

இதற்கிடையில், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் நீக்கியது.

அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக அமைச்சர் நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால், நாட்டில் வலிமையான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

இதையடுத்து, அந்நாட்டின் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவத் தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார்.

நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே இராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில், அங்கு இராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜிரலங்கோர்ன் ஆணை பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்தது பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையகம் அறிவித்தது.

ஆனால், சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, 500 உறுப்பினர்களைக் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கு அடுத்த மார்ச் 24 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான 08 ஆம் திகதி தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனா பிரதமர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட புதிய கட்சியான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு (தாய் ரக்சா சார்ட்) கட்சியின் வேட்பாளராக அவர் களமிறங்கினார்.

உபோல்ரத்தனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜிரலங்கோர்னின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !