Main Menu

மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்

வன்னி தேர்தல் தொகுதி, மன்னார் மாவட்டத்துக்கான சகல தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று புதன்கிழமை (13) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன.

 

மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் வி.சிவராஜா முதலான  அதிகாரிகளின் கண்காணிப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் இம்முறை 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 432 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

23 கட்சிகள், 25 சுயேட்சை குழுக்கள் உள்ளடங்கலாக 48 கட்சியினர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்கெண்ணும் நிலையமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் 8 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளைய தினம் வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...
0Shares