மனைவியை தற்கொலை செய்து கொள்ள தூண்டிய கணவருக்கு பத்தாண்டு சிறை!

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை தற்கொலை செய்து கொள்ள தூண்டிய குற்றச்சாட்டில் 10 ஆண்டுகால சிறைத்தண்டனையை பெற்றுள்ளார். இந்த வகையான விநோதமான வழக்கொன்று விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

68 வயதான கிரஹாம் மோரண்ட் என்ற நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

“1.4 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்” என்று நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.

தனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று நீதிபதி டேவிஸ் கூறினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்த போதும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !