Main Menu

மனித உரிமை குறித்த ஐ.நா தரவரிசை அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர் ஜெய்சங்கர்

உலக நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையத்தின் தரவரிசை, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெனிவாவில் உள்ள இந்திய மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “​​உலக நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையத்தின் தரவரிசை, அரசியல் உள்நோக்கம் கொண்டது. மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அதேநேரத்தில், நாடுகளை மதிப்பிடும் நடைமுறையை இந்தியா நிராகரிக்கிறது. ஏனெனில், இது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மைண்ட் கேம்.

மனித உரிமைகள் பற்றிய பல உரையாடல்கள் உலக வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பல நூற்றாண்டுகளாக உலகளவில் ஈடுபாட்டு வந்த அவர்கள், இப்போது ஜெனிவாவிற்கு வந்து மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். மனித உரிமை விவகாரத்தில் நமது பாதை குறித்தும், அதன் மதிப்பு குறித்தும் மற்றவர்களைக் கேட்க வைப்பது மிகவும் முக்கியம். நாம் நமது நாடு குறித்து தெளிவான பார்வை கொண்டிருக்காவிட்டால், நாமே நமது நாட்டை பொதுவில் விமர்சித்தால் மற்றவர்களும் நமது நாட்டை அவ்வாறே விமர்சிக்க அது வழி ஏற்படுத்திவிடும்.
நாம் 140 கோடி மக்களைக் கொண்ட ஜனநாயக நாடு. இயற்கையாகவே, குறைபாடுகள் மற்றும் தவறுகள் இருக்கும். ஆனால் இவை நமது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதியாகும். எனினும், அவை எமக்கு எதிரான தந்திரோபாயங்களாக பயன்படுத்தப்படக் கூடாது. மனித உரிமைகள் தொடர்பான நேர்மையான விவாதங்களுக்கு இந்தியா தயாராக உள்ளது. மனித உரிமைகளுக்கு நாம் எப்போதும் குரல் கொடுப்போம். ஆனால் தரவரிசை மற்றும் மதிப்பீடுகள் நேர்மையான உரையாடல்கள் அல்ல. அவை அரசியல் விளையாட்டுகள்” என்று கூறினார்.