மனிதாபிமானமற்ற செயல்களுக்கு வெனிசுவேலா ராணுவம் பொறுப்பேற்க நேரிடும் – ஜூவான் குவைடா எச்சரிக்கை!

வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அனுப்பிய நிவாரணப் பொருட்களை எல்லைக்குள் வரவிடாமல் தடுத்துள்ளமையானது வெனிசுலா ராணுவம் மேற்கொண்ட பாரிய தவறு என்று எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவைடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல். இதுபோன்ற செயல்களுக்கு ராணுவம் பொறுப்பேற்கும் நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் குவைடோ கடந்த ஜனவரி மாதம் தன்னை இடக்கால ஜனாதிபதியாக அறிவித்து கொண்டார்.

அவரை வெனிசுவோலாவின் அதிகாரப்பூர்வ நிர்வாகியாக அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதற்கு வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மாதுரோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராணுவத்தின் ஆதரவுடன் தன் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.

இதனிடையே, பொருளாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலாவில் மக்கள் உணவு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஜுவான் குவைடோ உலக நாடுகளிடம் நிவாரண உதவிகளை கோரியிருந்தார்.

ஆனால் “உலக நாடுகளிடம் கையேந்துவதற்கு நாம் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை” என்று ஜனாதிபதி நிக்கோலஸ் மாடுரோ கூறிவருகிறார். வெனிசுவேலாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் பொருளாதார தடை தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் வெனிசுவேலா மக்களுக்காக அமெரிக்கா அனுப்பிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எல்லைக்குள் நுழையவிடாமல் வெனிசுவேலா ராணுவத்தினர் கொலம்பியா எல்லையில் தடுத்து நிறுத்தினர். இருநாடுகளையும் இணைக்கும் பாலத்தையும் ராணுவத்தினர் மூடியுள்ளனர்.

அதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கொலம்பியாவின் எல்லை நகரான குகுடாவில் அந்த நிவாரண பொருட்கள் முடங்கியிருந்தது. ராணுவத்தினரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது மனிதாபிமானத்துக்கு எதிரான பாரிய குற்றம். இந்த செயல் இனபடுகொலைக்கு சமமானது. இந்த குற்றத்திற்கும் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் மரணத்திற்கும் ராணுவத்தினர் பொறுப்பேற்கும் நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி நிக்கோலஸ் மாடுரோவை விட்டு விலகி வரும் ராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் ஜுவான் குவைடோ அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், நேற்றையதினம் தமது முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்களை பொது மக்களுக்கு விநியோகித்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடனான மோதல்களுக்கு மத்தியிலும் இந்த பொருட்கள் எவ்வாறு நாட்டின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன என்று தெரிவிக்கப்படவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !