Main Menu

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – ஐங்கரநேசன் அழைப்பு

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், ‘மாவீரர்கள் எமது மண்ணின் காவலர்கள். இந்த மண்ணையும் மக்களையும் அளவுக்கு அதிகமாக நேசித்ததன் காரணமாகத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.

தங்கள் குடும்ப உறவுகளைக் கடந்து மொத்தத் தமிழினத்தினதும் வலிகளைத் தங்கள் தோள்மேல் சுமந்தவர்கள். ஈகைக்கு உவமை வேறு இல்லாத அளவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்த தியாக சீலர்கள்.

உக்கிரமான போர் நகர்வுகளின்போதுகூடப் படையினரின் நினைவு நடுகற்களைப் பாதுகாத்த முன்னுதாரணர்கள். போர் மரபுகளை மீறி இவர்களது நினைவு நடுகற்களைப் படையினர் சிதைத்து அழித்தாலும், இவர்தம் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதித்தாலும் எம் ஆழ்மனதில் நீங்காத நினைவுகளாக இடம்பெற்றிருப்பவர்கள்.

இவர்தம் வித்துடலணுக்கள் நிலம், நீர், காற்று என்று அரூபமாக வியாபித்திருந்தாலும் நினைக்கும்தோறும் சோதிப் பெருவெளிச்சமாய் முகம் காட்டுபவர்கள். திக்கற்றுத் தவிக்கும் தமிழ்மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக ஒளிவீசிக் கொண்டிருப்பவர்கள்.

தமிழர்கள் விக்கிரக வழிபாட்டுக்கு முன்னர் மரங்களை வளர்த்து இறைவனாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர்கள். இப்போதும் ஆலயங்களில் தலவிருட்சங்களாக மரங்களை வளர்த்து வழிபடும் மரபைக் கடைப்பிடிப்பவர்கள்.

மாண்டவர்கள் நினைவாக நடுகற்களை நிறுவுவதற்கு முன்னர் மரங்களை உயிருள்ள நினைவுச் சின்னங்களாக நட்டுப் பராமரிக்கும் மரபைக் கொண்டிருந்தவர்கள்.

அந்தவகையில் மாவீரர் புகழ் பாடி, அவர்களின் நினைவு நாளில் இல்லங்கள் தோறும் சுடரேற்றி அஞ்சலிக்கும் நாம் அவர்களின் நினைவாக மரமொன்றையும் நட்டுவைப்போம்.

மாவீரர்களைப் போன்றே மரங்களும் இந்த மண்ணின் பாதுகாவலர்கள். இவை வேறு எந்த உயிரினத்தையும்விட மண்மீது கூடுதலான நேசிப்பும் பிடிமானமும் கொண்டவை.

தங்கள் இனத்தையும் கடந்து புவிக்கோளின் ஒட்டுமொத்த உயிர்ப் பல்வகைமையையும் தாங்கி நிற்பவை. எமது எதிர்காலச் சந்ததி இந்த மண்ணில் வளமாக வாழ்வதற்கான உத்தரவாதமும் இவையே.

மாவீரர்தம் இலட்சியக் கனவுகளும் இம்மண்ணில் எமது மக்களின் வளமான சுதந்திரமான நீடித்த வாழ்வை உறுதி செய்வதாகத்தான் இருந்தன.

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம்.

இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares