மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக, மட்டக்களப்பு நகர முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியின் இரு மருங்கிலும் முச்சக்கரவண்டிகளை நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தினை  முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளருக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், மாநகர முதல்வரின் கொடும்பாவியினையும் கொண்டுசென்றனர்.

காந்திபூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து ஊர்வலமாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்ற முச்சக்கரவண்டி சாரதிகள், அங்கிருந்து மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றனர்.

கடந்த 30வருடமாக மட்டக்களப்பில் தமது சங்கம் செயற்பட்டுவரும் நிலையில், அதன் செயற்பாட்டினை குழப்பும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரும், ஆணையாளரும் செயற்படுவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்க தலைவர் எஸ்.ஜேசுதாசன் இதன்போது குற்றஞ்சாட்டினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !