மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா.வில் வாக்கெடுப்பு

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அந்தவகையில், இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. எனினும், இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால் மசூத் அசார் மீது தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வொஷிங்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கேசவ் கோகலே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பே (Mike Pompeo) சந்தித்துள்ளார். அதேநேரம், பிரதமர் மோடியும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி பல்வேறு அரச தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகின்றார்.

இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதும், சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !