மகிந்த குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தீர்வில்லை: வியாழேந்திரன்

மகிந்த குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்கள் தமக்கான தீர்வினை எதிர்பார்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நல்லாட்சி அரசாங்கம் தன்னிடம் உள்ள குறைபாடுகளைத் திருத்திச் செல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்காவிட்டால் அது ஆட்சிக்குப் பெரும் சரிவினை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் பலவீனங்களை காட்டிக்கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற நினைப்போருக்கு அந்த சந்தர்ப்பத்தினை வழங்காமல் தமது பலவீனங்களை திருத்திக்கொள்ளவேண்டும்.

தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு இதுவரையில் தீர்வுகள் வழங்கப்படா விட்டாலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷ குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் எதிர்பார்க்க முடியாது என்பதுடன், நிலைமை மேலும் மோசமாகும்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வரும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் குரல்கொடுப்பது இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !