பௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது

பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சந்தேகநபர்களை கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஹபரன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் புதைக்கப்பட்ட சடலத்தை நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் (வயது-32) அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பௌத்த பிக்குவிற்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் அவர் பௌத்த பிக்குவின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து குறித்த பிக்கு மேலும் மூவருடன் இணைந்து உயிரிழந்தவரின் சடலத்தை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கணவன் வீட்டிற்கு வராததையடுத்து அது தொடர்பில் மனைவி ஹபரன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளில் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !