போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்
இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் செக்பாயிண்ட் டிப்லைன் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. #WhatsApp
போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, புதிய வசதிகளை சேர்க்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் தற்சமயம் செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline) எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் போலி செய்திகளை முடக்கும் வகையில் இயங்குகிறது. இந்திய தேர்தல் காலத்தில் வாட்ஸ்அப் செயலியில் பரவும் போலி செய்திகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இணையம் முழுக்க போலி செய்திகள் பரவி, அவை பொது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
வாட்ஸ்அப் துணையுடன் இயங்கும் இந்தியா சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ரோடோ (PROTO) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
செக்பாயிண்ட் டிப்லைன் எவ்வாறு இயங்கும்?
பொது மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் எண்ணில் (+91-9643000888) சமர்பிக்கலாம். இந்த டிப்லைனில் பயனர் ஒரு குறுந்தகவலை பகிர்ந்து கொள்ளும் போது, ப்ரோடோவின் ஆய்வு மையம் சம்மந்தப்பட்ட குறுந்தகவல் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்பதை தெரிவிக்கும்.
பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு ப்ரோடோ மூலம் அனுப்பப்படும் பதிலில் சம்மந்தப்பட்ட குறுந்தகவல் உண்மை, பொய், தவறானது, பிரச்சினைக்குரியது போன்றவை இடம்பெற்றிருக்கும். செக்பாயிண்ட் டிப்லைனில் ஆங்கிலம் தவிர இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளை சப்போர்ட் செய்கிறது.