போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது – அரசு எச்சரிக்கை

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு, குறித்த நாளுக்கான சம்பளம் வழங்கப்படமாட்டாதென அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வேலைநிறுத்த நாட்களில் மாவட்ட வாரியாக பணிக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பாடசாலை கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில், தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மறியல் போராட்டமும், 25ஆம் திகதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அத்தோடு, 26ஆம் திகதி குடியரசு தினத்தன்று அடுத்தக்கட்ட தீவிர போராட்டம் குறித்து சென்னையில் கூடி முடிவு செய்து அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த  போராட்டம் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 10 இலட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் இந்த போராட்டத்தில் ஒரு பிரிவினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !