போதையில் தாயைத் தாக்கி கொன்ற மகன் ; யாழில் சம்பவம்
போதையில் வீட்டுக்கு வந்த மகன் தாயைத் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி குமரநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கையில்.
கைதடி குமரநகர் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் தினமும் போதைப் பொருட்களைப் பாவித்துவிட்டு வந்து தனது தாயுடன் சண்டையிட்டு அவர்மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார். இவ்வாறே கடந்த திங்கட்கிழமை இரவும் போதையில் வீட்டுக்கு வந்தவர் தனது தாயைத் தேங்காய் திருவையால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த தாயை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுகாலை குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் 32 வயதான மகனைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு இன்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கானெ நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.