போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் 8-வது நாளாக தொடர்கிறது

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசுப் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்தாலும், தற்காலிக ஊழியர்கள் மூலம் பயணிகளை நெரிசலை சமாளிக்கும் அளவுக்கு பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
ஸ்டிரைக் தொடர்பான வழக்கினை விசாரித்த ஐகோர்ட், தொழிலாளர்களை உடனடியாக பணிக்குதிரும்பும்படி உத்தரவிட்டது. நிலுவைத் தொகை ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்து, போராட்டத்தைக் கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர்.
பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்திய நிலையில், 8-வது நாளாக இன்றும் ஸ்டிரைக் தொடர்கிறது.
ஸ்டிரைக் ஆரம்பித்த நாளில் இருந்த நிலை மாறி தற்போது அதிக அளவிலான பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன. திருச்சியில் 60 சதவீதம், புதுக்கோட்டையில் 70 சதவீதம், நாமக்கல் 88 சதவீதம், விருதுநகர் 85 சதவீதம், தூத்துக்குடி 65 சதவீதம், கன்னியாகுமரி 40 சதவீதம், திருவாரூர் 83 சதவீதம் என்ற அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குவதை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறி உள்ளன.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !