பொலிஸார் மட்டுமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது: பிரதமர்
பொலிஸாரின் அதிகாரங்களை அதிகரிப்பதால் மாத்திரமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் வன்முறை உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பேசிய தெரேசா மே கூறியதாவது;
இந்த பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பலதுறைகளைச் சேர்ந்தவர்களின் நீண்டகால ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.பொலிஸாரால் மாத்திரமே இந்த பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற கடுமையான வன்முறை சம்பவங்கள் உட்பட சமீபத்திய மாதங்களில் பயங்கரமான வன்முறை குற்றங்களின் காரணமாக பல இளைஞர்களின் வாழ்க்கை பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே குற்றங்களை இழைத்தவர்களும் இளைஞர்களாக இருப்பதே மிகவும் கவலையளிக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு பகுதிகள் மீதும் கவனம் செலுத்துகின்ற இந்த இளைஞர் வன்முறை உச்சிமாநாடு நூறுக்கும் அதிகமான நிபுணர்களை உள்ளடக்கியிருந்தது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் இளைஞர் வன்முறை தொடர்பான உச்சிமாநாட்டை நடத்துவது மட்டுமின்றி கத்திக்குத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்திப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.