பொருளாதார மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்றுவது அவசியம்: சீன ஜனாதிபதி

சர்வதேச திறந்த பொருளாதாரத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியமென சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ நிகழ்வு (China International Import Expo) நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஷாங்காயில் ஆரம்பமானது. அதில் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி ஜின்பிங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதாரம், அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய விடயங்களின் உலகம் இன்று முன்னோக்கி செல்கின்றது. குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக நலன் ஆகியன ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு செல்கின்றதென சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் சகல நாடுகளும் பரந்தளவில், பரஸ்பர ஒத்துழைப்புகளுடன் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்துவது அவசியமென வலியுறுத்தினார். அபிவிருத்தியை பொறுத்தமட்டில் சகலருக்கும் நன்மை பயக்கும் வகையில் அதனை முன்னெடுப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ மூலம் இறக்குமதியை திறன்வாய்ந்ததாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும், சந்தை அணுகலை விரிவுபடுத்தவும், உலகத்தரம்வாய்ந்த வர்த்தக சூழலை ஏற்படுத்தவும், புதிய பொருளாதார நுணுக்கங்களை செயற்படுத்தவும், பன்னாட்டு மற்றும் இருதரப்பு மட்டங்களில் சர்வதேச வர்த்க உறவை வலுப்படுத்தவும் எதிர்பார்ப்பதாக சீன ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் செயற்படுத்தவுள்ள சில திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விளக்கினார். அதாவது, ஷாங்காய் சுதந்திர வர்த்தக மண்டலத்தை விரிவுபடுத்துதல், ஷாங்காய் பங்குச்சந்தையில் அறிவியல் மற்றும் தொழிநுட்பக் குழுவொன்றை உருவாக்குதல் போன்ற பல திட்டங்களை வகுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !