பொங்கலுக்கு வெளிவருகிறது சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ திரைப்படம் அடுத்த ஆண்டு(2019) பொங்கலுக்கு வெளியாகவிருப்பதாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட்ட’. இந்தபடத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.

இந்த நிலையில், திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

மேலும் கார்த்திக் சுப்பராஜ், ரஜினிகாந்த் – சிம்ரனோடு குளிர் பிரதேசம் ஒன்றில் மகிழ்ச்சியாக கைகோர்த்து செல்வது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார். இளமையான தோற்றத்தில் காணப்படும் ரஜினி மிகவும் ஸ்டைலிஷாகவும் காணப்படுகின்றார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்தின்  ‘பேட்ட’ திரைப்படத்துடன் மோதவுள்ளது.

‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், கல்லூரி விடுதி காப்பாளர் தாதா வேடத்தில் நடித்துள்ளார். மதுரையை பின்னணியாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளன.

மேலும் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !