கடந்த ஒக்டோபர் மாதம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பெரு கால்பந்தாட்ட அணித்தலைவரான பாப்லோ குயரிரோவுக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) ஒரு வருடத் ஓராண்டு தடை விதித்துள்ளது.

பெரு கால்பந்தாட்ட அணித்தலைவரான 33 வயதான பாப்லோ குயரிரோவிடம் கடந்த ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு ஒரு வருடத் தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அவரது தடை காலம் கடந்த மாதம் 3 ஆம் திகதியில் இருந்து கணக்கிடப்படும்.

இதன் மூலம் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு அவரால் பங்கேற்க முடியாது. குயரிரோ பெரு அணிக்காக அதிக கோல்கள் (88 போட்டிகளில் 33 கோல்) அடித்தவர் ஆவார்.

இவ்வணி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு 36 ஆண்டுகளுக்கு பின்னர் தகுதி பெற்றுள்ளதுடன், அவரின் இழப்பு அவ்வணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.