Main Menu

பெரும்போக நெல்லிற்கான குறைந்தபட்ச கட்டுப்பாட்டு விலை 50 ரூபா – ஜனாதிபதியின் பணிப்பு

  • உரிய நியமங்களை பூர்த்தி செய்யாத நெல் ஒரு கிலோகிராமிற்கு 44 ரூபா…..
  • விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு ஒரே நாளில் பணம் வைப்பிலிடப்படும்…..
  • குறித்த வங்கிக் கிளைகள் 07 நாட்களும் திறந்திருக்கும்…..
  • செயற்பாட்டினை துரிதப்படுத்த முப்படையினரின் பங்களிப்பு…..
  • வீழ்ச்சியடைந்துள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்களைப் பலப்படுத்த நடவடிக்கை….

2019 / 20 பெரும்போகத்தின் போது அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

குறித்த நியமங்களை பூர்த்தி செய்த நெல்லிற்கான விற்பனை விலை கிலோகிராமிற்கு 50 ருபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் இடத்திற்கு நெல்லை கொண்டு வரும்போது அதன் ஈரப்பதன் 14% மூ சதவீதமாகவும் உயர்ந்தபட்ச பதர் 9% சதவீதமாகவும் காணப்படல் வேண்டும்.

குறித்த நியமங்களுக்கு உட்படாத ஈரப்பதன் 14% சதவீதத்தைவிட அதிகமான 22% சதவீதத்தைவிட குறைந்த நெல் வேறாக இனங்காணப்பட்டு கிலோகிராமிற்கு 44 ரூபாவாக கொள்வனவு செய்யப்படும். விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதனை தவிர்க்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளை பலப்படுத்தி நாட்டை நெல் உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்தல் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகுமென இவ்விடயம் தொடர்பில் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதனால் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பிரதேச மக்களின் வருமானம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக 100 பில்லியன் ரூபாய்களை செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் நெல் உற்பத்தியானது 08 – 09 மாதகால நுகர்விற்கு போதுமானதாகும்.

உரிய நியமங்களுக்கு உட்படாத நெல்லை உலர வைப்பதற்கு தனியார் துறையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை உலர வைப்பதற்கான செலவாக ஒரு கிலோகிராமிற்கு 4.00 ரூபா வீதம் தனியார் நெல் ஆலையாளர்களுக்கு செலுத்தப்படும்.

2019ஃ20 பெரும்போகத்தின் அறுவடை தற்போது கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை அறுவடை மேற்கொள்ளப்படும். நெல்லை கொள்வனவு செய்தல் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன, கிராமிய அபிவிருத்தி, உள்நாட்டு வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட செயலாளர்களினால் நெல் சந்தைப்படுத்தும் சபையின் மேற்பார்வையில் இடம்பெறும்.

இந்த செயற்பாட்டினை முறையாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக முப்படையினரின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும். இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி, சமூர்த்தி வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியன முதன்மை நிதி அனுசரணையாளர்களாக செயற்படுவர். குறித்த வங்கி கிளைகள் தேவை ஏற்படும்பட்சத்தில் வார இறுதி நாட்களிலும் திறந்திருக்கும்.

கொள்வனவு செய்யப்படும் தரமிக்க நெல்லின் பெறுமதிக்கான கொடுப்பனவு சான்றிதழ் நெற்சந்தைப்படுத்தல் சபையினால் வழங்கப்படும். அதனை குறித்த வங்கி கிளைக்கு சமரப்பிக்க வேண்டியதுடன், வங்கி உடனடியாக உரிய பணத்தினை விவசாயியின் கணக்கில் வைப்பிலிடும்.

ஈரப்பதன் 14 – 25 சதவீதம் வரை காணப்படும் குறைந்த தரத்திலுள்ள நெல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களினால் கொள்வனவு செய்யப்படும் உரிய நெற் தொகைக்கான பெறுமதியினை குறிப்பிட்டு கொடுப்பனவு சான்றிதழ் பிரதேச செயலாளரினால் வழங்கப்படும்.

கொள்வனவு செய்யப்படும் உயர்ந்தபட்ச நெல்லின் அளவு சராசரியாக ஒரு ஏக்கருக்கு 1000 கிலோகிராம்கள் ஆகும். 1- 3 ஏக்கர் பரப்பில் 3000 கிலோகிராம் நெல்லும் 3-5 ஏக்கர் பரப்பில் 5,000 கிலோகிராம் நெல்லும் கொள்வனவு செய்யப்படும். இம்முறை பெரும்போகத்தில் 20 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கொள்வனவு செய்யப்படும் நெற் தொகையினை உரியவாறு களஞ்சியப்படுத்துவதற்கு உணவு ஆணையாளர் வசமுள்ள அனைத்து களஞ்சியசாலைகளையும் நெற் சந்தைப்படுத்தல் சபைக்கோ அல்லது மாவட்ட செயலாளர்களுக்கோ கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உபயோகத்திற்கு கொள்ளப்படாத வேறு கட்டிடங்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரமளிக்கப்படும்.

களஞ்சியப்படுத்துவதற்கு ஏற்றவாறு பொருத்தமான பொதிகளை உபயோகித்தல் போன்ற துரித முறைகளை தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட செயலாளரின் சிபாரிசுக்கமைய முப்படையினர் களஞ்சியசாலைகளுக்கான பாதுகாப்பினை வழங்குவர். இதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

செயற்திட்டத்திற்கு தேவையான பொதிகள், ஈரப்பதனை அளவிடும் உபகரணங்கள், தராசுகள் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட செயலாளர்களும் நெற்சந்தைப்படுத்தல் சபையும் வழங்க வேண்டும். போக்குவரத்திற்காக அரச நிறுவனங்களுக்கு சொந்தமான லொறிகளும் டிரெக் வாகனங்களும் தேவைக்கேற்ப உபயோகிக்கப்படும்.

இந்த செயற்திட்டத்தினை உரியவாறு நடைமுறைப்படுத்துதலை தேசிய முக்கியத்துவமுடைய விடயமாக கருதி ஒட்டுமொத்த அரச சேவையாளர்களும் அறுவடை காலத்தில் அர்ப்பணிப்புடன் முன்னுதாரணமாக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.