பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த நபர், காவல் துறையினரால் அதிரடியாக கைது!

சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையிட்ட மர்ம நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் 54 வயதான பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார்.

நேற்று பிற்பகல் கணவர் வீட்டில் இல்லாததால் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சுமார் 1 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார்.

நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் அலறியுள்ளார். ஆனால், விரைவாக செயல்பட்ட நபர் பெண்ணை தாக்கி விட்டு ஒரு நாற்காலியில் கட்டுபோட்டுள்ளார்.

பின்னர், வீடு முழுவதும் சோதனையிட்ட நபர் கையில் கிடைத்த ஆயிரக்கணக்கான பிராங்க் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

மாலையில் கணவர் வீடு திரும்பியபோது தனது மனைவி நாற்காலியில் கட்டப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு நடந்தவற்றை அறிந்துக்கொண்ட கணவர் தனது மனைவியுடன் சென்று பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பெண்ணிடம் விசாரணை நடத்திய பொலிசார் கொள்ளையிட்ட நபரின் அடையாளங்களை சேகரித்துக்கொண்டனர்.

பின்னர், பிற மாகாண பொலிசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு கொள்ளையனை தேடும் பணி தொடங்கிய நிலையில் துர்கவ் நகரில் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

துர்கவ் நகரில் நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !