பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே – சுப்ரீம் கோர்ட்டு
பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தாம்பத்திய உறவிலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அந்த டாக்டர் மீது புகார் கொடுத்தார்.
அதன்படி கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் 2013-ம் ஆண்டு நடந்தது.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் வேறு ஒருவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார்.
டாக்டர் மீதான வழக்கில் கீழ் கோர்ட்டு அவர் மீது கற்பழிப்பு குற்றப்படி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இறுதியாக டாக்டர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் நாகேஷ்வரராவ், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
அப்போது டாக்டர் தரப்பில் வாதாடிய வக்கீல் சம்பந்தப்பட்ட டாக்டர் அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் தாம்பத்திய உறவு வைத்திருந்தார். இது கற்பழிப்பு குற்றமாக கருத முடியாது என்று வாதாடினார்.
அதற்கு நீதிபதிகள், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி கற்பழிப்பு குற்றத்தை உறுதி செய்தார்கள். 10 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
ஆனாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொண்டது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
குற்றவாளியான டாக்டருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதை மறைத்து சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தாம்பத்திய உறவு வைத்து இருக்கிறார்.
அதாவது வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த பெண்ணை ஏமாற்றி நம்ப வைத்து தனது பசிக்கு விருந்தாக்கி இருக்கிறார்.
பெண்ணின் கற்பு என்பது சாதாரண விஷய மல்ல, கற்பழிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு கொலைக்கு சமமானது. கொலை நடக்கிறது என்றால் ஒருவருடைய உடல் அழிக்கப்படுகிறது.
ஆனால், கற்பழிப்பில் ஒரு பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. அவருடைய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது. உதவியற்ற ஆன்மாவாக அவர் சுற்றித்திரிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். ஒரு மிருகத்தின் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த பாதிப்பு தொடர்கிறது.
எனவே, கடுமையான குற்றத்தின் அடிப்படையில் கற்பழிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து அவர் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் கூட அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அழிந்து போவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.