Main Menu

பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்

ஆணுக்கு வெளிஉலகத்தில் என்னதான் கிடைத்தாலும் அவன் வீட்டிற்குள் அரவணைப்புக்கும், ஆனந்தத்துக்கும் ஏங்குவான். அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்க பெண் அவனுக்கு வாழ்க்கையில் தேவைப்படுகிறாள்.

பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்ஆண்கள் உடல் அளவில் பாறை போன்றவர்களாக இருந்தாலும், மனதளவில் பனியை போன்றவர்கள். சிறுவயதில் தாயின் அன்புக்காக ஏங்கி அதில் கரைந்துபோகும் அவர்கள், திருமண வயதில் அதே அன்பை தனது வயதுக்கு ஏற்ற பெண்ணிடம் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் ஆண்களின் வாழ்க்கையில் இன்னொரு பெண், திருமணத்தின் மூலம் இணைத்துவைக்கப்படுகிறாள். ஆணுக்கு வெளிஉலகத்தில் என்னதான் கிடைத்தாலும் அவன் வீட்டிற்குள் அரவணைப்புக்கும், ஆனந்தத்துக்கும் ஏங்குவான். அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்க பெண் அவனுக்கு வாழ்க்கையில் தேவைப்படுகிறாள்.

எப்போதுமே பெண்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாழத்தெரிந்தவர்கள். இடத்துக்குதக்கபடி தங்களை எளிதாக மாற்றிக் கொள்ளவும் செய்வார்கள். அந்த ஆற்றல் அவர்களது திருமணத்தில் வெளிப்படுகிறது. திருமணத்திற்கு முன்புவரை யாரென்றே தெரிந்திராத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையோடும், புதிய மனிதர்களோடும்தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக்கொண்டுதான் அவள் மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாள். கணவனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப்போகும் பண்பையும் வளர்த்துக்கொள்கிறாள்.

கணவன் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை வீட்டில் உறுதி செய்துகொள்கிறாள். இதன் மூலம் கணவன் தன்னிடமிருந்து அகலாமல் பார்த்துக்கொள்கிறாள். தங்களை சுற்றியிருப்பவர்களின் எண்ணங்களை குறிப்பால் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு. அந்த அளவுக்கு அவர்களிடம் அபரிமிதமான உள்ளுணர்வு சக்தி இருக்கிறது. பெண்கள் எல்லாவற்றையும்விட அன்புக்காகவே அதிகம் கவலைப்படுவார்கள். ஆகவே கணவன் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என பெண் எதிர்பார்ப்பாள்.

உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மனோரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது, செயல்படுவது, ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின் மூலமாக ஒவ்வொரு பெண்ணும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இயல்பாகப் பெறுகிறார்கள். ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை விலகுவதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக்கொள்கிறது. பிற்காலத்தில் தாமும் ஒரு தாயாகப்போகிறோம் என்ற உள்ளுணர்வால், தனது தாயின் இடத்தை வகிக்கப் பயிற்சி பெறுகிறது.

ஒரு தாய், தன் மகள் வடிவில் தான் மீண்டும் வாழ்வதாக நினைக்கிறாள். அவளது மகளோ, தனது தாயின் வாழ்வை தான் அடுத்த தலைமுறையில் தொடர்வதாக எண்ணுகிறாள். இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் மகள் வடிவில் வாழ்வதால் தன்னை சாகாவரம் படைத்தவள் என கருதி கர்வப்படவும் செய்கிறாள்.

ஆண்களைப் போல் தனக்கென ஒரு எல்லையைப் பெண் நிர்ணயம் செய்துகொள்வதில்லை. அவள் விசால மனம் படைத்தவள். தான் கற்ற ஒரு சிறிய விஷயத்தை வைத்தே வாழ்க்கையை முன்னுக்குக்கொண்டு வந்துவிடும் திறன் பெண்ணிடம் இருக்கிறது. வெற்றியால், உயர்வால் ஓர் ஆண் அடைய முடியாத எல்லாவற்றையும் ஒரு பெண் எளிதாக அடைந்துவிடுகிறாள். ஆண் செய்யும் அத்தனை விஷயங்களும் பெண்ணைச் சுற்றியே அமைகிறது. ஓர் ஆண் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம், நட்பு என எந்த ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு ஒரு பெண்ணைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இவ்வாறு மனித வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணின் மூலமாகவே காலங்காலமாகக் கடந்து செல்கிறது. இதுதான் பெண்ணை முழுமையானவளாக்குகிறது.