புல்வாமா தாக்குதல் கொடூரமானது: டொனால்டு ட்ரம்ப்

இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படுமென்றும் புல்வாமா தாக்குதல் கொடூரமானது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை அலுவலகத்தில்  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ட்ரம்ப் இதனைக் கூறினார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “புல்வாமா தாக்குதல் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதுபற்றி சரியான நேரத்தில் எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புல்வாமா தாக்குதல் மிகவும் கொடூரமாகவுள்ளது.  அதுபற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றோம். காஷ்மீர் தாக்குதல் குறித்த எங்களது நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிடுவோம்” எனக் கூறியள்ளார்.

இதன்போது, தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமெரிக்கா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க விடுத்துள்ள அறிக்கையில், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானை வலியுறுத்தினர்.

கடந்த 14ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !