புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது- பிரதமர்
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கெவாடியா நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளதாவது, “உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தருணமிது.
பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றால் ஒருவரும் பலனடைய முடியாது. இந்தியா எப்பொழுதும் பயங்கரவாதத்திற்கு எதிராகவே போராடி வருகிறது.
புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தபொழுது, சிலர் அதற்காக வருத்தப்படவில்லை. இதனை ஒருபோதும் நாடு மறக்காது.
அவர்கள் அந்த நேரத்தில் அரசியல் செய்து கொண்டு இருந்தனர். இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நாட்டின் நலனுக்காக நான் வேண்டி கேட்டு கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.