புல்வாமாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு 4 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் இராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14ஆம் திகதி பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இவ்வாறான நிலையில் இன்று மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க இராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசும் கூறியுள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை தேடும்பணியில் தொடர்ந்தும் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !