புலிகளை பயன்படுத்தி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்!- யாழில் நாமல்

நல்லாட்சி அரசாங்கத்தினர் விடுதலை புலிகளை பற்றி பேசி தமிழர்களின் வாக்குகளை பெற முயற்சிக்கிறார்களே தவிர, தமிழர்களுக்கான அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதாக இல்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரக் கூட்டங்களின்போது சில சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் கீதம் ஒலிப்பதைக் கேட்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு விடுதலை புலிகளின் கீதத்தை ஒலிக்கவிடுவதன் மூலமும், அவர்கள் பற்றி பேசுவதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என இவர்கள் எண்ணுகின்றனர்.

ஆனால், இவர்கள் ஒருவரேனும் தமிழர்களின் அபிவிருத்தி குறித்தோ, தமிழ் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு குறித்தோ பேசியதாக இல்லை.

வடக்கின் அபிவிருத்தியை கருத்திற் கொள்ளாது இனவாதத்தின் மூலம் வாக்கை பெற்றுக் கொள்வதற்கே நல்லாட்சி அரசாங்கத்தினர் முயற்சிக்கின்றனர். இதனை மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் ஏற்க மாட்டார். மஹிந்த ராஜபக்ஷ, தெற்கின் அபிவிருத்தியை போன்று வடக்கின் அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தினார். மஹிந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டதற்கு பின்னர் வடக்கில் எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை.

எனவே, நாம் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூறுவது என்னவென்றால், வடக்கில் தயவுசெய்து இனவாதத்தை தூண்டி வாக்குகளை பெற முயற்சிக்காதீர்கள். வடக்கு மக்களுக்காக சேவையாற்றுங்கள், இளைஞர் யுவதிகளுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுங்கள்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !