புற்றுநோய் தாக்கியதாக நாடகமாடி நிதி திரட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை!

பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஜாஸ்மின் மிஸ்திரி என்ற  இந்திய வம்சாவளி பெண், தனக்கு மூளையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறி இதற்கான சிகிச்சை செலவுக்கு 5 லட்சம் பவுண்டுகள் தேவைப்படுவதாக கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதி திரட்டி வந்தார்.
இதற்கு ஆதாரமாக ஒரு டாக்டரின் பரிந்துரை கடிதம் மற்றும் மூளைப்பகுதியின் ஸ்கேன் ஆகியவற்றை அவர் வெளியிட்டிருந்தார்.
இதை உண்மை என்று நம்பி ஜாஸ்மின் கணவரின் உறவினர்கள் மற்றும் சில கொடையாளர்கள் சுமார் இரண்டரை லட்சம் பவுண்டுகள் வரை நிதியுதவி செய்திருந்தனர்.
இந்நிலையில், ஜாஸ்மினுடைய கணவர் தனது மனைவியின் ஸ்கேன் படத்தை தனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் காட்டியபோது, அது ஜாஸ்மினுடைய மூளைப்பகுதி அல்ல, ‘கூகுள்’ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட போலியான படம் என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து கடந்த ஆண்டு ஜாஸ்மினை கைது செய்த போலீசார் ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜூடித் ஹக்ஸ் ‘மிக மோசமான குற்றச்செயலாக தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ஜாஸ்மின்(36) நான்காண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !