Main Menu

புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது- கெஹெலிய

புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே புர்கா தடை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை மாத்திரம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் உலக நாடுகள் பலவும் புர்காவைத் தடை செய்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “புர்கா தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கடந்த 10 முதல் 15 வருடங்களுக்குள் ஏற்பட்டுள்ள கலாசார மாற்றங்கள் தொடர்பாக இவ்விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்ட காலமாக முஸ்லிம் மக்களுடனான சுமூக உறவு பேணப்படுகிறது. அதில் எவ்வித சிக்கலும் காணப்படவில்லை. எனினும், அண்மைக்காலமாக புர்கா உள்ளிட்ட பல வியடங்களில் கலாசார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விடயங்கள் ஏதேனுமொரு வகையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்ற அடிப்படையில் உலகின் பல நாடுகள் இவற்றைத் தடை செய்துள்ளன.

எனவே, இது தொடர்பாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாகவும் உரிய காலத்தில் அவசரமின்றி தீர்மானிக்கப்படும்.

இதேவேளை, ஜெனிவா அமர்விற்கும் புர்கா விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது உள்நாட்டுப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். எனினும், சர்வதேச ரீதியில் பல நாடுகள் இவற்றைத் தடை செய்துள்ளன. பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகக் கருதியே உலக நாடுகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன. எனவே, இலங்கை தேசிய பாதுகாப்பை மாத்திரம் கருத்திற் கொண்டுதான் இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

முஸ்லிம் சமூகத்தினர், முஸ்லிம் தலைவர் மற்றும் அரசாங்கம் உள்ளிடவற்றில் அரபு மொழி கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

அத்தோடு, மத்ரசா பாடசாலைகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது மிக முக்கிய விடயம் என்பதால் துரிதமான தீர்மானங்களை எடுக்க முடியாது. புர்கா மற்றும் நிஹ்காப் ஆகியவை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.