புயலினால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் வானிலை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு!

இத்தாலி புயல் தாக்கத்தினால் இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒரு வாரகாலமாக இத்தாலியில் நிலைகொண்டிந்த புயல், தற்போது கரையை அடைந்துள்ளது.

கடும் புயல் காரணமாக, இத்தாலியின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன், நாட்டின் பல பகுதிகளும் பெரும் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்திருந்தது.

குறிப்பாக வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தவிர, சிசிலி, தெற்கு சர்டினியா பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின.

சிசிலி தீவில் தாஸ்டில் டாக்சியா என்ற பகுதி கடும் சேதம் அடைந்தது. அங்கு மிலிசியா என்ற ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததினால் பலர் உயிரிழிக்க, பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பல வீடுகள் தண்ணீரில் மூழ்க, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் அடங்கலாக 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பல இடங்களில் மண் சரிவுகளும், மரங்கள் முறிந்து வீழ்ந்தும் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் அழிவடைந்துள்ளன. 2 லட்சத்து 500 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்த பைன்ஆப்பிள் தோட்டங்கள் அழிந்துள்ளன.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் பார்வையிட்டதுடன், மக்களுக்கு உடனடி நிவாரணங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதுடன், அவர்களுக்கான மருத்துவ சுகாதார உதவிகளும் வழங்கப்படுகின்றன.

பெரும் உயிர் மற்றும் சொத்தழிவினை ஏற்படுத்திய கடும் புயல் இன்று கரையை அடைந்துள்ளமையினால் எதிர்வரும் காலங்களில், மழை குறைந்து வானிலை வழமைக்கு திரும்பும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !