புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’
தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று, கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியிருந்தது.
அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு சிக்கலான பிரச்சினை என்பதால் இந்த விவகாரத்தை ஆய்வு செய்த பின்னரே, அதுகுறித்து பார்க்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதேவேளை, பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தியப் பிரதமரிடம் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரியிருந்தனர் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
எனினும், கூட்டமைப்பு பிரதிநிதிகளின் புதுடெல்லி பயணம் எப்போது என்ற தகவல் அந்தச் செய்தியில் கூறப்படவில்லை.