புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம்

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும்  போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்றிலிருந்து 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்தின்போது மேற்கு வங்கம், கேரளா, பிஹார் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு கடைகள், வணிக வளாகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிஹார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூர், டெல்லி, மும்பை நகரங்களில் குறைந்த அளவே வாகனங்கள் இயங்கியுள்ளன.

இந்த நிலையில், பெங்களூர் நகரிலுள்ள அரசு அலுவலகங்கள் இயங்கியுள்ளது. ஆனாலும் குறைந்த அளவே ஊழியர்கள் வருகைதந்திருந்தனர்.

மேலும்,  கர்நாடகாவில் வேலை நிறுத்தப் போராட்டம் பகுதியளவே வெற்றிபெற்றது. இதேபோல ஒடிசாவிலும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்தது. அங்கும் ரயில்கள், பேருந்துக்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றுள்ன.

பிஹாரின் மால்டா, கேரளாவின் திருவனந்தபுரம், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ரயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !