புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பித்துள்ளன.

குறித்த போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று, வீரர்கள் ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழியெடுத்தனர்.

அதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொடியசைத்து திறந்து வைத்துள்ளார். அதன்படி, முதலில் கோயில் காளைகளும், பின்னர் ஏனைய காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. ஒரு மணிநேரத்திற்கு 75 பேர் என்ற வீதத்தில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த போட்டி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், இதில் 1400 காளைகள், 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 1500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் பாதுகாப்பிற்காக 10 வைத்தியர்கள் அடங்கிய 13 மருத்துவக்குழுக்களும், 15 எம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பிற்காக 30 பேர் கொண்ட இந்திய – திபெத் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, மாடு பிடிக்கும் வீரர்களுக்கு 2 சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்படவுள்ளன. அதன்படி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், சிறந்த காளைக்கு மற்றொரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !