பீகார் சட்டசபை தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியது!
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 28-ம் திகதி நடைபெற்றது.
இந்நிலையில் 94 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 இலட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு நடுவே தோ்தல் நடத்தப்படுவதால் இதை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால் தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.