பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் மே மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானுக்கு எதிரான வழக்கின் மனு மீதான விசாரணை நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !