பிலிப்பீன்ஸ் அதிபருக்குக் கொலை மிரட்டல்
பிலிப்பீன்ஸ் துணையதிபர் சாரா டுட்டார்டே (Sara Duterte) விசாரணைக்கு வரும்படி இன்று (26 நவம்பர்) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடும்.
அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior) உள்ளிட்டோருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தாம் கொல்லப்பட்டால், அதிபர் மார்க்கோஸ், அவருடைய மனைவி, நாடாளுமன்ற நாயகர் ஆகிய மூவரையும் கொல்ல ஏற்பாடு செய்திருப்பதாகத் திருவாட்டி டுட்டார்டே கூறியிருந்தார்.
அந்த மிரட்டலை எதிர்த்துப் போராட அதிபர் மார்க்கோஸ் ஜூனியர் உறுதியளித்துள்ளார்.
திருவாட்டி டுட்டார்டேயின் கருத்து பொறுப்பற்றது, கவலைக்குரியது என்று அவர் கூறினார். அந்தச் சதித்திட்டத்தைக் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது என்றார் அவர்.
அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் திருவாட்டி டுட்டார்டே மீது ஏற்கெனவே சந்தேகம் எழுந்துள்ளது.
அவர் மீது விசாரணை நடத்துவதைத் திருவாட்டி டுட்டார்டே அலுவலகத்தின் தலைமை அதிகாரி தடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
தலைமை அதிகாரியைச் சிறைக்கு அனுப்பும்படியும் அவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதற்குப் பதிலடியாக திருவாட்டி டுட்டார்டே மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மார்க்கோஸ் – டுட்டார்டே குடும்பங்களுக்கு இடையே நீடிக்கும் அரசியல் பகையாக அந்தப் பிரச்சினை பார்க்கப்படுகிறது.
பகிரவும்...